தொகுதி கண்ணோட்டம்: ஆயிரம் விளக்கு
சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரம்விளக்கு தொகுதிக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முக்கிய பிரமுகர்கள் அதிகம் பேர் வசிக்கும், வசித்த தொகுதி இது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி (கோபாலபுரம்), ஜெயலலிதா(போயஸ்கார்டன்) ஆகியோர் இந்த தொகுதியை சேர்ந்தவர்கள்தான்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, ராதாரவி உள்ளிட்டோரும், தொழில் அதிபர்கள் பலரும் இந்த தொகுதியில்தான் வசிக்கிறார்கள். இதேபோல், முக்கிய இடங்களான அமெரிக்க துணை தூதரகம், வள்ளுவர் கோட்டம், அண்ணா (ஜெமினி) மேம்பாலம், மறைந்த பிரபல நடிகர் சிவாஜிகணேசன் வீடு ஆகியவையும் இந்த தொகுதியில்தான் வருகின்றன.
2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, அண்ணாநகர் தொகுதியில் இருந்து 3 மாநகராட்சி வார்டுகளும், தியாகராயநகர் தொகுதியில் உள்ள 2 வார்டுகளும் புதிதாக சேர்க்கப்பட்டன. தற்போது, இந்த தொகுதியில் சென்னை மாநகராட்சி வார்டுகள் 109, 110, 111, 112, 113, 117, 118 ஆகியவை வருகின்றன.இதுவரை இந்த தொகுதியில் நடந்த தேர்தல்களில் தி.மு.க. 10 முறையும், அ.தி.மு.க. 4 முறையும் வெற்றி வாகை சூடியுள்ளது. அதாவது, 1957-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி, 1962 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் தி.மு.க.
வேட்பாளர் கே.ஏ.மதியழகன், 1977-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெ.சாதிக்பாட்ஷா ஆகியோர் வெற்றி பெற்றனர். தி.மு.க.வின் 23 ஆண்டு கால தொடர் வெற்றிக்கு 1980-ம் ஆண்டு அ.தி.மு.க. முட்டுக்கட்டை போட்டது.
1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்ட கே.ஏ.கிருஷ்ணசாமி தொடர் வெற்றி பெற்றார். 1989-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடினார். 1991-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். அதன்பின்னர், 1996, 2001, 2006-ம் ஆண்டு தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலின் “ஹாட்ரிக்” வெற்றியை பதிவு செய்தார். 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதி வெற்றி பெற்று அமைச்சரானார். ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்ட கு.க.செல்வம் 8,828 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை தவிர பா.ஜ.க., ம.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் உள்பட 20 பேர் டெபாசிட் இழந்தனர்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்
மொத்த வாக்குகள் 2,43,386
பதிவான வாக்குகள் 1,41,477
கு.க.செல்வம் (தி.மு.க.) 61,725
பா.வளர்மதி (அ.தி.மு.க.) 52,897
ஆயிரம்விளக்கு தொகுதியில் உள்ள பிரச்சினை என்று பார்த்தால், சாலைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. கொசுத்தொல்லை, அடிக்கடி பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பு, குடிநீர் பிரச்சினை ஆகியவை ஆங்காங்கே தலைதூக்குகிறது.இந்த தொகுதியில், தாழ்த்தப்பட்ட மக்கள் 40 சதவீதமும், வன்னியர்கள் 30 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும், முதலியார் சமூகத்தினர் ஓரளவும் இருக்கின்றனர். மற்ற சமூகத்தினரும் பரவலாக காணப்படுகின்றனர். எனவே, தாழ்த்தப்பட்ட மக்களும், வன்னியர்களுமே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கின்றனர்.கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, ஆயிரம்விளக்கு தொகுதியில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 386 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது, புதிய வாக்காளர்கள், தொகுதிமாறி வந்தவர்கள் புதிதாக இணைந்தாலும், வாக்காளர்கள் 789 பேர் குறைந்துள்ளனர். போலி வாக்காளர்கள் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம், தனது கட்சி தலைமையான தி.மு.க. மீது அதிருப்தியில் இருந்தார். பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த அவர் அக்கட்சியில் இணைந்துள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு ஆயிரம்விளக்கு தொகுதி கிடைக்க வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.வே களம் இறங்கத்தான் தீவிரம் காட்டும். எனவே,கு.க.செல்வத்திற்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறிதான். 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. சார்பில் வேட்பாளராக அசன் முகமது ஜின்னா போட்டியிட்டார். அப்போது அவர் தோல்வி அடைந்தாலும், 59,930 வாக்குகளை பெற்றார். என்றாலும், இந்த முறை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இருதரப்பிலும் புதிய வேட்பாளர்களையே களம் இறக்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் இருகட்சிக்கும் சம பலமே இருக்கிறது.
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் - 2,42,597
ஆண்கள் - 1,18,537
பெண்கள் - 1,23,965
மூன்றாம் பாலினத்தவர்கள் - 95