தொகுதி கண்ணோட்டம்: சேலம் வடக்கு
சேலம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறுசீரமைப்புக்கு பின் கடந்த 2011-ம் ஆண்டு சேலம் வடக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு சேலம் வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு அக்கட்சியை சேர்ந்த அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.
இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வக்கீல் ராஜேந்திரன், 86 ஆயிரத்து 583 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை 9 ஆயிரத்து 873 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
சேலம் வடக்கு தொகுதி மாநகராட்சியில் உள்ள 6-வது வார்டு முதல் 16 வார்டு வரைக்கும், 26-வது வார்டு முதல் 36-வது வார்டு வரைக்கும் என மொத்தம் 22 வார்டுகள் மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சியை உள்ளடக்கி உள்ளது. இங்கு வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்தாலும் செட்டியார், நாடார், ஆதிதிராவிடர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் பரவலாக
உள்ளனர். மேலும், கோட்டை, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் அதிகமாக உள்ளனர்.
வடக்கு தொகுதியில் பிரதான தொழில் என்று எடுத்துக்கொண்டால் எதுவும் இல்லை. ஏனென்றால் இத்தொகுதி முழுக்க, முழுக்க மாநகர பகுதியை கொண்டதாகும். தொகுதி மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், சாக்கடை கால்வாய், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட பொது பிரச்சினைகள் தான் அதிகமாக உள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் வக்கீல் ராஜேந்திரன், தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு தேவையான குடிநீர், தார்சாலை, கான்கிரீட் சாலை, பயணிகள் நிழற்குடை, சுகாதார வளாகம், பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார் என்று தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
அதேசமயம், சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை காணமுடிகிறது. எனவே, முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ஜான்சன்பேட்டை, மணக்காடு, ராஜகணபதி நகர், பெரமனூர், அழகாபுரம், பெரியபுதூர் உள்ளிட்ட பல இடங்களில் தினமும் குப்பைகள் சரிவர சேகரிக்கப்படாததால் ஆங்காங்கே தெருக்களில் கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. வீடுகள் தோறும் குப்பைகளை சேகரித்தல், சாக்கடை கால்வாயை அடிக்கடி தூர்வாரி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் பாதுகாத்தல், சீரான குடிநீர் வினியோகம் உள்ளிட்டவற்றில் உரிய கவனம் செலுத்தவேண்டும் என்பதே வடக்கு தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த தொகுதியில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட முதன்மை நீதிபதி, வனத்துறை உள்ளிட்ட அரசு துறைகளை சேர்ந்த முக்கிய உயர் அதிகாரிகளின் குடியிருப்புகள் அனைத்தும் அமைந்துள்ளது. டாக்டர், ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள், வக்கீல்கள் உள்பட படித்தவர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தொகுதியாகும்.
2016-ம் ஆண்டு சேலம் வடக்கு தொகுதியில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 929 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதியவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் என 8 ஆயிரத்து 847 வாக்காளர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இவர்களது வாக்குகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. எந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.தர்ந்ெதடுக்கப்பட்டாலும் சேலம் வடக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.
2016 தேர்தல் வாக்கு விவரம்:
மொத்த வாக்குகள் - 2,65,929
பதிவான வாக்குகள் - 1,88,968
ராஜேந்திரன் (தி.மு.க.) - 86,583
கே.ஆர்.எஸ்.சரவணன்(அ.தி.மு.க.)- 76,710
கதிர்.ராசரத்தினம் (பா.ம.க.) - 7,975
ஆர்.பி.கோபிநாத் (பா.ஜ.க.) - 5,922
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் -2,74,776
ஆண்கள் -1,34,319
பெண்கள் -1,40,436
மூன்றாம் பாலினம் -21