’கன்னியாகுமரியை முதல்நிலை மாவட்டமாக உயர்த்துவேன்’ - பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்

’கன்னியாகுமரியை முதல் நிலை மாவட்டமாக உயர்த்துவேன்’ என அத்தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-06 11:16 GMT
நாகர்கோவில்,

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக செயல்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கிடையில், தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதே நாளில் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அக்கட்சி இன்று அறிவித்தது. அதன்படி, பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என பாஜக கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ’முன்னெடுத்த அத்தனை பணிகளும் முடிக்கப்படும். எனது இலக்கு கன்னியாகுமரி மாவட்டம் இந்தியாவின் முதல்நிலை மாவட்டமாக மாற்றுவது. அதுமட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில்வளத்தை ஏற்படுத்திக்கொடுப்பதில் முன்னணியில் கவனம் கொடுப்பேன். மாவட்ட மக்களின் முழு ஒத்துழைப்புடன் திட்டங்கள்
கொண்டுவரப்படும்’ என்றார். 

மேலும் செய்திகள்