தொகுதி கண்ணோட்டம்: ஓட்டப்பிடாரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம் தொகுதி ஆகும். இது பரப்பளவில் பெரிய சட்டமன்ற தொகுதியாக விளங்கி வருகிறது.
வீர பூமி
1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி வீரபாண்டிய கட்டபொம்மன், ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட பல்வேறு விடுதலை போராட்ட வீரர்களை தந்த வீர பூமியாக விளங்குகிறது. இ்ங்கு மானாவாரி விவசாயம் நடக்கிறது. ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் புதியம்புத்தூர் இந்த தொகுதியில் அமைந்து உள்ளது. இங்கு ஆயத்த ஆடைகள் உற்பத்தி சமீபகாலமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தொகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகிறது.முதலில் பொதுத்தொகுதியாக இருந்த ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1962-ம் ஆண்டு
காங்கிரஸ் சார்பில் ஏ.எல்.ராமகிருஷ்ண நாயக்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1967-ம் ஆண்டு கடம்பூர் தொகுதி நீக்கப்பட்டு பெரும்பான்மையான பகுதிகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் சேர்க்கப்பட்டன. இதன் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் தொகுதி தனித்தொகுதியாக்கப்பட்டது.
இதுவரை வென்றவர்கள்
ஓட்டப்பிடாரம் தொகுதி இதுவரை 14 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இதில் 3 முறை காங்கிரஸ் கட்சியும் (1962-ம் ஆண்டு, 1977, 1984), 4 முறை அ.தி.மு.க.வும் (1991, 2001, 2006, 2016), 2 முறை தி.மு.க.வும் (1989, 2019) வெற்றி பெற்று உள்ளன.இதுதவிர 1980-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி, 1967-ம் ஆண்டு சுதந்திரா கட்சி, 1971-ம் ஆண்டு பார்வர்டு பிளாக் கட்சி, 1996-ம் ஆண்டு ஜனதா கட்சி, 2011-ம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்று உள்ளன.
வாக்காளர்கள்
இந்த தொகுதியில் தற்போது 1 லட்சத்து 22 ஆயிரத்து 372 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 27 ஆயிரத்து 653 பெண் வாக்காளர்கள், 28 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 53 வாக்காளர்கள் உள்ளனர்.ஓட்டப்பிடாரம் தொகுதியில் மறுசீரமைப்புக்கு பிறகு தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்து பெரும்பாலான பகுதிகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் சேர்க்கப்பட்டன. தற்போது இந்த தொகுதியில் ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த பகுதிகள் இடம்பெற்று உள்ளன.
இடைத்தேர்தல்
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சுந்தர்ராஜ் பதவி நீக்கம் செய்யப்பட்டதால், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சண்முகையா 73 ஆயிரத்து 241 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் 53 ஆயிரத்து 584 ஓட்டுகள் பெற்றார். பதவி நீக்கம் செய்யப்பட்ட சுந்தர்ராஜ் மீண்டும் போட்டியிட்டு, 29 ஆயிரத்து 228 ஓட்டுகள் பெற்றார். இடைத்தேர்தல் முடிந்து குறுகிய காலத்தில் மீண்டும் தற்போது தேர்தலை சந்திக்கிறது இந்த தொகுதி.
கோரிக்கைகள்
தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை ஓட்டப்பிடாரம் பகுதிகளுக்கு திருப்பி விட வேண்டும், ஓட்டப்பிடாரத்தில் கோர்ட்டு அமைக்க வேண்டும், புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்க வேண்டும், ஓட்டப்பிடாரம் யூனியனை இரண்டாக பிரித்து ஒட்டநத்தத்தை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் அமைக்க வேண்டும், ஓட்டப்பிடாரம் கிராம பஞ்சாயத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும், அரசு போக்குவரத்து கழக டெப்போ மற்றும் பஸ்நிலையம் அமைக்க வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி
செய்யும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் தொகுதி மக்கள்.
இந்த தொகுதியில் வெற்றிக்கனியை பறிக்க அ.தி.மு.க, தி.மு.க.வினர் தீவிர களப்பணியில் இறங்கி உள்ளனர். வெற்றியை வசப்படுத்தப்போவது யார்? என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் - 2,50,053
ஆண்கள் - 1,22,372
பெண்கள் - 1,27,653
மூன்றாம் பாலினத்தவர்கள் - 28