தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Update: 2021-03-06 00:43 GMT

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில், இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி பின் வாங்கியது. 6 தொகுதிகள் என்ற தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை அன்றைய தினம் சுமுக உடன்பாடுடன் முடிவடைந்தது.

6 தொகுதிகள்

இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு முத்தரசன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்டு கட்சி குழுவினர் நேற்று மாலை வந்தனர். அங்கு தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ‘இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் வழங்கப்படுகிறது’ என்ற உடன்பாடு ஒப்பந்ததில் மு.க.ஸ்டாலினும், முத்தரசனும் கையெழுத்திட்டனர்.

லட்சியம் முக்கியம்

பின்னர் அண்ணா அறிவாலயத்தில் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கையா? லட்சியமா? என்று கேட்டால், லட்சியத்துக்குதான் முதலிடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாடு வகுப்பு வாதத்துக்கு எதிராக களம் கண்ட மாநிலம். சாதி, மத வெறிக்கோ இடமளிக்காத தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை கட்டிக்காத்து வரும் மாநிலம். சமூக நீதிக்காக போராடி வெற்றி பெற்ற மாநிலம். அப்படிப்பட்ட மாநிலத்தில் நடக்கக்கூடிய தேர்தலில் வகுப்புவாத சக்திகள் இந்த தேர்தல் மூலமாக சில சக்திகளின் பலவீனத்தை பயன்படுத்தி வலுவாக காலூன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது.

முக்கிய தேவை

ஒரு பக்கம் பா.ஜ.க., அ.தி.மு.க. ஒரு அணி. இதனால் உருவாக்கப்பட்ட வேறொரு அணி. இந்த 2 அணிகளையும் எதிர்த்து போராடக்கூடிய தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது மிக முக்கியமான தேவையாகும். அந்த அரசியல் தேவையை இந்திய கம்யூனிஸ்டு உணர்ந்து, அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தமட்டில், இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை பலப்படுத்த, உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் பல முயற்சிகளை மேற்கொண்டது மட்டுமல்ல, வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்த தேர்தலிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான் வெற்றி பெற வேண்டும் என்ற உயர்ந்த லட்சியம், கொள்கையோடு இணக்கமான தொகுதி பங்கீடு குறித்து 2 கட்டமாக பேசி, கையெழுத்திட்டு இருக்கிறோம். எந்தெந்த தொகுதிகள் வேண்டும்? என்ற உத்தேச பட்டியலை தி.மு.க.விடம் வழங்கி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விருப்ப தொகுதிகள் என்னென்ன?

இந்திய கம்யூனிஸ்டு கட்சி 11 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை தி.மு.க.விடம் வழங்கி, இதில் 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

அதில், புதுக்கோட்டை, வால்பாறை, குன்னூர், வேளச்சேரி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்துறைப்பூண்டி, பவானிசாகர், தளி, சிவகங்கை, அறந்தாங்கி, ஆலங்குளம் ஆகிய தொகுதிகள் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்