திருச்சி கிழக்கு தொகுதி கண்ணோட்டம்

மலைக்கோட்டை தாயுமானசாமி, நத்தர்வலி தர்கா, புனித லூர்து மாதா கிறிஸ்தவ ஆலயம் என வரலாற்று சிறப்புமிக்க மும்மத அடையாளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள தொகுதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியாகும்.

Update: 2021-03-05 05:57 GMT
இத்தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெல்லமண்டி நடராஜனும், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜெரோம் ஆரோக்கியராஜும் போட்டியிட்டனர். இதில் வெல்லமண்டி நடராஜன், ஜெரோம் ஆரோக்கியராஜை விட சுமார் 21 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி அடைந்தார். தற்போது அவர் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார். திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையில் தொடங்கி திருச்சி சர்வதேச விமான நிலையம் வரை திருச்சி கிழக்கு தொகுதியின் எல்லையாகும். பிரபல ஜவுளி, நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் அமைந்துள்ள என்.எஸ்.பி. சாலை, பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, அன்றாடம் பலகோடி ரூபாய் பணப்புழக்கம் நடைபெறும் ஜாபர்ஷா தெரு, பெரிய கம்மாள தெரு, சின்ன கம்மாள தெரு மற்றும் காந்திமார்க்கெட், பிரபலமான முக்கிய கல்விநிறுவனங்கள் இத்தொகுதியில் இடம் பெற்று இருப்பதால் வர்த்தக ரீதியான கண்ணோட்டத்திலும் இத்தொகுதி மாநில அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. முழுக்க முழுக்க மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள இந்த தொகுதியில் 8 முதல் 26 வார்டு வரையும் 33, 34, 35, 37, 38, 43 ஆகிய வார்டுகளும் இடம் பெற்று உள்ளன.

மனித உடலில் நடுவில் அமைந்துள்ள இதயம் போன்ற திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியும் நகரின் நடுவில் அமைந்துள்ளதால் இத்தொகுதியை பிடிப்பதில் கட்சிகளிடையே கடுமையான போட்டி எப்போதுமே நடப்பது உண்டு. இத்தொகுதியில் வெள்ளாளர் இன மக்கள் அதிக அளவில் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஆதிதிராவிடர்கள், முத்தரையர்கள், யாதவர்கள், முக்குலத்தோர், நாடார், செட்டியார், நாயுடு, விஸ்வகர்மா, மூப்பனார் இன மக்களும் பரவலாக உள்ளனர். சிறுபான்மையினரை பொறுத்தவரை கிறிஸ்தவ வெள்ளாளர், இஸ்லாமியர்கள் மற்றும் மார்வாடிகளும் கணிசமான அளவில் உள்ளனர். குறிப்பிட்ட சாதியினர் தான் இங்கு வெற்றி பெற முடியும் என பரலாக ஒரு கருத்து நிலவினாலும் சாதி, மதம் இவற்றை எல்லாம் தாண்டி கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக வரலாறு இருக்கிறது.

இனி இந்த தொகுதி வாக்காளர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.

சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அன்பு செல்வன் கூறுகையில், ‘40 அடி அகலம் கொண்ட சங்கிலியாண்டபுரம் மெயின்ரோடு தற்போது 20 அடியாக குறுகி போய்விட்டது, இதனால் ஒரே நேரத்தில் டவுன் பஸ்கள் எதிர் எதிரே வரும்போது அதன் சக்கரங்கள் சாக்கடைக்குள் இறங்கி விடுகிறது. எனவே சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநகராட்சி கவுன்சிலர் பதவியில் இருந்த வரை சாக்கடை அடைப்புகள் அவ்வப்போது சரி செய்யப்பட்டன. ஆனால் தற்போது மன்ற உறுப்பினர்கள் இல்லாததால் துப்புரவு பணிகள் சரியாக நடப்பது இல்லை' என்றார்.

சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சந்திரகுமார் கூறும்போது, ‘ஜி கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. ஒரு வழிப்பாதையாக உள்ள சர்வீஸ் சாலையில் எதிரும், புதிருமாக வாகனங்கள் வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இந்த பிரச்சினையை தீர்க்க சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.

திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்த குடும்ப தலைவி ஜோதி கூறுகையில், ‘இந்த அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ரேஷன் கடையில் தட்டுப்பாடு இன்றி அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது' என்றார்.

மேலும் செய்திகள்