மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இன்று 2 -வது நாளாக வேட்பாளர் நேர்காணல்
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2வது நாளாக நேர்காணல் இன்றும் நடக்கிறது. திருப்பூர், ஈரோடு, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று நேர்காணல் நடத்துகிறார்
சென்னை
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் நேர்காணல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கியது. முதல் நாளில் 9 மாவட்டங்களுக்கு நடந்தது.
சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களிடம் இருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை விருப்ப மனுக்கள் கட்சி அலுவலகத்தில் பெறப்பட்டு வந்தன.
அதன்படி, தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு 8 ஆயிரத்து 388 விருப்ப மனுக்கள் பெறப்பட்டு இருந்தன. அவற்றில் 7 ஆயிரத்து 967 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒருவர் 2 தொகுதிகளில் கூட மனு தாக்கல் செய்திருந்தனர். அந்தவகையில் சுமார் 7 ஆயிரம் பேர் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாக கூறப்பட்டது.
அவ்வாறு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கான வேட்பாளர் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. இந்த வேட்பாளர் நேர்காணல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது. இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்பட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முதல் நாளான நேற்று காலை 9 மணிக்கு மேல் கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, நெல்லை கிழக்கு, மத்தியம், தென்காசி வடக்கு, தெற்கு மற்றும் ராமநாதபுரம் ஆகிய கட்சி நிர்வாக ரீதியான மாவட்டங்களுக்கும், மாலையில் விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய கட்சி நிர்வாக ரீதியான மாவட்டங்களுக்கும் என 9 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது.
காலையில் நடந்த நேர்காணலில் கன்னியாகுமரி தொகுதியில் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் உள்பட சிலரும், தூத்துக்குடி தொகுதியில் கீதாஜீவன், ஜெகன் உள்பட சிலரும், திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.ஜெயதுரை, மணல்மேடு சுரேஷ், ரமேஷ், முத்து செல்வன் உள்பட சிலரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஜோயல், உமரி சங்கர், சொர்ண குமார் உள்பட சிலரும்,
பாளையங்கோட்டை தொகுதியில் மைதீன்கான், அப்துல் வஹாப், இறையன்பன் குத்தூஸ், ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை, சிவ பத்மநாபன், எழில்வாணன் உள்பட சிலரும், திருநெல்வேலி தொகுதியில் சரவணன், லட்சுமணன், முத்துராமலிங்கம், மாலைராஜா உள்பட சிலரும், அம்பாசமுத்திரம் தொகுதியில் ஆவுடையப்பன், சுவாமிநாதன், இசக்கி பாண்டியன் உள்பட சிலரும் என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கடந்த 21 ஆண்டுகளாக காங்கிரஸ் போட்டியிடுவதாகவும், இந்த முறை தி.மு.க. போட்டியிட வேண்டும் என்றும் விருப்ப மனுதாரர்கள் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் ஒருவர் இதை சொல்வதற்காகவே விருப்ப மனு தாக்கல் செய்து மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் பிற்பகலில் நடந்த நேர்காணலில் 500-க்கும் மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த சுமார் 15 முதல் 35 பேர் வரை நேர்காணலில் பங்கு பெற்றனர்.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2வது நாளாக நேர்காணல் இன்றும் நடக்கிறது. திருப்பூர், ஈரோடு, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று நேர்காணல் நடத்துகிறார்.
நேர்காணலுக்கு வந்தவர்களிடம் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது, வெற்றி பெற என்ன பணிகள் செய்யலாம், கட்சிக்கு ஆற்றிய பணிகள் என்னென்ன போன்ற விவரங்களைக் கேட்டனர்.
மொத்தமாக 7000 பேரிடம் வருகிற 6 ஆம் தேதி வரை நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.