அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு இழுபறி ; பிரேமலதா விஜயகாந்த் அவசர ஆலோசனை

சென்னை சாலிகிராமம் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்துடன் நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-03-01 09:12 GMT
படம்: ANI
சென்னை

அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து பேசிய நிலையில், 2-ம் கட்ட பேச்சுவார்த்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நேற்று இரவு நடந்தது.

இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது தே.மு.தி.க. நிர்வாகிகள், பா.ம.க.வுக்கு நிகராக தங்களுக்கு தொகுதிகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையும் சுமுக முடிவு எட்டப்படாமல் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

தேமுதிக நிர்வாகிகள் அமைச்சர் தங்கமணியை இன்று காலை சந்தித்து பேச திட்டமிடபட்டிருந்தனர்.  தற்போது வரை தேமுதிக நிர்வாகிகள் அமைச்சர் வீட்டுக்கு வரவில்லை

இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல் வெளியாகி உள்ளது. 20 முதல் 25 தொகுதிகளை தேமுதிக எதிர்பார்ப்பதாகவும் 
அதிமுக தரப்பில் 11 தொகுதிகள் மட்டுமே கொடுக்கமுடியும் என கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமம் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்துடன் நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்