கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிற்பனை செய்யும் தாபாக்களுக்கு 'சீல்' கலெக்டர் உத்தரவு

Update: 2023-05-25 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிற்பனை செய்யும் தாபாக்களுக்கு சீல் வைக்க கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக, சாராய ஒழிப்பு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்து அமலாக்க பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் சாராயம், சாராய ஊறல், வெளிமாநில மது, உதிரி விற்பனை மது, அனுமதி பெறாத மதுபானக்கூடம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி, அதன் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் விற்பனை மேலாளர், மதுபான கடைகள் திறக்கும், மூடும் நேரங்களை சரியாக பின்பற்ற வேண்டும்.

டாஸ்மாக் கடைகளுக்கு அருகே அனுமதியின்றி மதுபானக் கூடங்கள் செயல்படுகிறதா?, திறந்தவெளியில் மதுப்பிரியர்கள் மதுகுடிக்கிறார்களா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு தனிநபருக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மதுவகைகள் விற்பனை செய்ய கூடாது. இதுதொடர்பாக அனைத்து டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

'சீல்' வைக்க வேண்டும்

தாபா ஓட்டல்களில் மதுவிற்பனை, மதுகூடங்கள் செயல்பட வாய்ப்பு உள்ளதால், அனைத்து தாபா ஓட்டல்களின் விவரங்களை சேகரித்து, மதுவிலக்கு போலீசார் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் 119 டாஸ்மாக் கடைகளில் விற்பனை விவரத்தை சேகரித்து, குறைவான விற்பனை பகுதிகளில் சாராயம் புழக்கத்தில் உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

சந்துக்கடைகள், மதுவிற்பனை செய்யும் தாபாக்களுக்கு சீல் வைத்து உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், உதவி கலெக்டர் பாபு, உதவி ஆணையர் சுகுமார், கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்