மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சுரண்டை:
சுரண்டை அருகே மேலப்பாட்டாகுறிச்சி கிராமம் இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகு மகன் கனகராஜ் (வயது 22). இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கனகராஜ் கடையநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். கம்பளி அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் வயலில் அமைக்கப்பட்டிருந்த வேலிக்கல்லில் மோதியது. இதில் கனகராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாம்பவர்வடகரை போலீசார் அங்கு சென்று கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.