பாம்பின் தலையை கடித்து துண்டாக்கிய வாலிபர்கள்
பாம்பின் தலையை கடித்து துண்டாக்கிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சின்ன கைனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மோகன் (வயது 33), சூர்யா (21), சந்தோஷ் (21). இவர்கள் மூன்று பேரும் அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து தண்ணீர் பாம்பை பிடித்து உள்ளனர். பின்னர் அதனை துன்புறுத்தி, அதன் தலையை வாயால் கடித்து இரண்டு துண்டாக்கி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இது குறித்து ஆற்காடு வனச்சரக அலுவலர் சரவண பாபு வனவிலங்கு துன்புறுத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல், சர்ச்சைக்குரிய வீடியோ பதிவேற்றுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இது போன்று விலங்கினங்களை துன்புறுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.