பொருட்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது

வடமதுரையில் வீடு புகுந்து பொருட்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-02 19:45 GMT

வடமதுரை காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சகாய அருள் ஸ்டாலின் மனைவி ஜான்சிராணி (வயது 35). இவர் திண்டுக்கல்லில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதனால் தற்போது இவர் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். இவரது உறவினர் வினோத் (30). இவர் மதுரையில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்து வருகிறார். ஜான்சிராணிக்கும், வினோத்துக்கும் இடையே வடமதுரையில் உள்ள வீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வடமதுரையில் ஜான்சிராணி வீட்டின் பூட்டை உடைத்து வினோத் உள்ளே சென்றார். அங்கு இருந்த பொருட்கள் மீது அவர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் ஜான்சிராணிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வீட்டுக்கு வந்து ஜான்சிராணி பார்த்தபோது அங்கு இருந்த கட்டில், மெத்தை, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி கிடந்தன. இதனை ஜான்சிராணி தட்டிக்கேட்டபோது, வினோத் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்சிராணி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்