சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை இறந்தது.
முசிறி, ஆக.15-
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை இறந்தது.
பலாத்காரம்
துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் கண்ணன்(வயது 25). இவருக்கும், 15 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி திருமணம் நடந்தது. பின்னர் அந்த சிறுமியுடன் கண்ணன் குடும்பம் நடத்தினார். சில நாட்களில் அவருக்கும், சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக கண்ணன் பலாத்காரம் செய்துள்ளார்.இந்நிலையில் அவரை பிரிந்து அந்த சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கர்ப்பமாக இருந்த அந்த சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை, அவரது தாய் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர் இல்லாத நிலையில், ஆஸ்பத்திரிக்கு வெளியே சிறுமி காத்திருந்தபோது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
குழந்தை சாவு
இதையடுத்து அருகே உள்ள மறைவிடத்திற்கு சென்ற அந்த சிறுமி, குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு தாயும், மகளும் அங்கிருந்து சென்றனர். இதற்கிடையே தனியார் மருத்துவமனைக்கு டாக்டர் வந்ததையடுத்து, சிறுமியை தேடியபோது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி சமூக நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உப்பிலியபுரம் சமூக நலத்துறை அலுவலர் விஜயா, முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார், அந்த சிறுமியையும், அவர் பெற்றெடுத்த குழந்தையையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கைது
இது குறித்து கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் முசிறி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.