ரூ.13½ லட்சம் மோசடி குறித்து விசாரிக்க கோரி சேலத்தில் வாலிபர் சாலை மறியல் போராட்டம்
ரூ.13½ லட்சம் மோசடி குறித்து விசாரிக்க கோரி சேலத்தில் வாலிபர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கோரணப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 27). இவர் நேற்று சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தன்னிடம் மோசடி செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று கூச்சலிட்டபடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த 3 பேர் எனக்கு அறிமுகமானார்கள். அப்போது அவர்கள் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறினர். இதை நம்பி நானும் எனது நண்பர்களும் சேர்ந்து ரூ.13½ லட்சம் முதலீடு செய்தோம். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் பணம் திரும்ப தராமல் மோசடி செய்து விட்டனர். பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே பணத்தை பெற்றுத்தரக்கோரி மறியலில் ஈடுபட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அங்கிருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை போலீஸ் துணை கமிஷனர் மாடசாமியிடம் ஒப்படைத்தார். ஆனந்தின் புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் படி அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமிபிரியாவுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு வாலிபர் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.