திட்டக்குடி அருகேஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 நாய் குட்டிகளை உயிருடன் மீட்ட இளைஞர்கள்

திட்டக்குடி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 நாய் குட்டிகளை இளைஞர்கள் உயிருடன் மீட்டனா்.

Update: 2022-12-23 18:45 GMT

ராமநத்தம், 

திட்டக்குடி அருகே உள்ள ஏ.அகரம் கிராமத்தில் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதடைந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அதை பழுது நீக்கம் செய்வதற்காக ஊராட்சி நிர்வாகத்தினர் மின்மோட்டாரை எடுத்தனர். ஆனால் அதன்பின்னர் அந்த ஆழ்துளை கிணற்றை மூடாமல் வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று அந்த ஆழ்துளை கிணற்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 3 நாய் குட்டிகள் எதிர்பாராதவிதமாக தவறி சுமார் 50 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தன.

ஆழ்துளை கிணற்றில் இருந்து நாய் குட்டிகள் கூச்சலிடும் சத்தத்தை கேட்ட அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அங்கு விரைந்து வந்து, கயிறு கட்டி நாய் குட்டிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 3 நாய் குட்டிகளையும், இளைஞர்கள் உயிருடன் மீட்டனர்.

நாய் குட்டிகள் தானே என அலட்சியமாக நினைக்காமல் மனிதாபிமானத்தோடு நாய் குட்டிகளை மீட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

மேலும் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல், திறந்த ஆழ்துளை கிணற்றை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்