வாலிபரை வெட்டிக்கொன்று உடல் ஆற்றில் வீச்சு

காதலியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வாட்ஸ் ஆப்பில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால் வாலிபரை வெட்டிக்கொன்று உடலை ஆற்றில் வீசினர். இது தொடர்பாக தந்தை-மகள், மகன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-15 22:12 GMT

வல்லம்;

காதலியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வாட்ஸ் ஆப்பில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால் வாலிபரை வெட்டிக்கொன்று உடலை ஆற்றில் வீசினர். இது தொடர்பாக தந்தை-மகள், மகன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சை அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வாலிபர் மாயம்

தஞ்சையை அடுத்துள்ள திருமலைசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 23). இவர் சொந்தமாக மினி வேன் வைத்து பால் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் வேன் ஓட்டி வந்தார். கடந்த 6-ந் தேதி அன்று வீட்டை விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவேல் வீட்டுக்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் சக்திவேல் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

வாய்க்காலில் ஒதுங்கிய உடல்

இது குறித்து சக்திவேலின் அண்ணன் சரவணன் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அன்று தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகில் உள்ள ராராமுத்திரக்கோட்டை மேலத்தோப்பு நெய்வாசல் தென்பாதி வாய்க்காலில் வாலிபரின் உடல் ஒன்று ஒதுங்கியது.

வெட்டிக் கொன்று உடல் ஆற்றில் வீச்சு

அந்த வாலிபருடைய உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன. தகவல் அறிந்த போலீசார் வாய்க்காலில் ஒதுங்கிய வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தியபோது அந்த வாலிபரை யாரோ வெட்டிக்கொன்று உடலை ஆற்றில் வீசியது தெரிய வந்தது. இந்த நிலையில் வல்லம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிய வர காணாமல் போன சக்திவேலின் உறவினர்களை அழைத்துச்சென்று பார்த்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட நபர் சக்திவேல் தான் என்பதை அவருடைய தாயார் வசந்தி போலீசாரிடம் உறுதிப்படுத்தினார்.இதனையடுத்து சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

தனிப்படை அமைப்பு

இது குறித்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா உத்தரவின் பேரில் வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், ஜோஸ்பின் சித்தாரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ஆனந்த்ராஜ், புவனேஷ் ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படை போலீசார் இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

செல்போன் மூலம் விசாரணை

செல்போன் கோபுரம் மூலம் ஆய்வு செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட சக்திவேல் கடைசியாக தனது செல்போனில் இருந்து யாரிடம் பேசியுள்ளார் என்று விசாரணை நடத்தினர். அப்போது சக்திவேல் கடைசியாக அய்யாசாமிபட்டியை சேர்ந்த பாலகுரு என்பவரிடம் செல்போனில் பேசியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் பாலகுருவை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர் மதுரைக்கு கண் ஆபரேஷனுக்கு செல்வதாக கூறிச்சென்று விட்டு தலைமறைவாகி விட்டார்.

தந்தை-மகள் உள்பட 8 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் வல்லம் புதூர் சேத்தி கிராம நிர்வாக அலுவலர் வள்ளி முன்பு ஆஜரான பாலகுரு தான் சக்திவேலை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். இதனையடுத்து அவரை வல்லம் போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். போலீசாரிடம் பாலகுரு பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொலை தொடர்பாக வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுரு(48), அவரது மகன் துரைமுருகன்(19), மகள் தேவிகா(20), சத்யா(34), கதிர்வேல் (45), கூலிப்படையை சேர்ந்த கிரிவாசன்(45), சந்தோஷ்குமார்(44), கார்த்தி(35) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீசார் தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவின் பேரில் தேவிகாவை திருச்சி மத்திய சிறையிலும், மற்ற 7 பேரை புதுக்கோட்டை சிறையிலும் அடைத்தனர்.காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்று உடலை ஆற்றில் வீசிய சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்