நெல்லையில் இளைஞர் சரமாரி வெட்டிக்கொலை: காதல் விவகாரம் காரணமா? - போலீசார் விசாரணை

இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-24 08:26 GMT

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். தொழிலாளி. இவரது மகன் முத்தையா(வயது 19). இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு நேரம் வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதிகளில் தேடி சென்றனர். அப்போது சுவாமிதாஸ் நகரில் உள்ள காட்டு பகுதியில் அவரது மோட்டார் சைக்கிள் கிடந்தது. உடனே உறவினர்கள் அந்த பகுதியில் தேடி பார்த்தனர். அப்போது கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பாகங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் முத்தையா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று முத்தையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை முத்தையா காதலித்து வந்துள்ளார். அவர்கள் 2 பேரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு சமீபத்தில் தெரியவந்ததகாவும், அவர்கள் அதனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பெண்ணின் தரப்பினர் யாரேனும் இந்த கொலையை செய்திருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க திசையன்விளை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்