வாலிபர் மர்மச்சாவு வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம்

அருப்புக்கோட்டையில் வாலிபர் தங்கப்பாண்டி மர்மமான முறையில் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-09-20 19:59 GMT

அருப்புக்கோட்டையில் வாலிபர் தங்கப்பாண்டி மர்மமான முறையில் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

மர்மச்சாவு

அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி (வயது 32) என்பவர் கடந்த 13-ந் தேதி எம்.டி.ஆர். நகரில் ஒரு வீட்டு சுவர் ஏறி குதித்ததாக அப்பகுதி மக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணைக்கு பின் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் காப்பகத்தில் இருந்து அவரது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

இந்தநிலையில் அவரது உறவினர்கள் வாலிபரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பலன் இல்லை.

பிரேத பரிசோதனை

இதனைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் முத்து இசக்கி நேரடி விசாரணை மேற்கொண்டார். அவரிடம் தங்கப்பாண்டியின் உறவினர்கள் நியாயமான விசாரணை வேண்டுமென வலியுறுத்தினர். மாஜிஸ்திரேட் முத்துஇசக்கி உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் தங்கப்பாண்டியின் உறவினர்கள் உடல் பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட் முத்து இசக்கி முன்னிலையில் நடந்தது. பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு முன் உடல் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு மாற்றம்

பிரேத பரிசோதனைக்கு பின் தங்கப்பாண்டியின் மனைவி கோகிலவாணிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும்.

பிரேத பரிசோதனை அறிக்கை நகல் மற்றும் வீடியோ பதிவு நகல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தங்கப்பாண்டியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.

நேற்று இரவு வரை உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கப்பாண்டி மர்மமான முறையில் இறந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்