ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவருடைய 3-வது மகன் ஜெகன் (வயது 29). இவர் விவசாய பணிகள் செய்து வந்தார். மேலும் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராகவும் பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் ஜெகன் மலையடிபுதூர் தாமரைகுளம் பொத்தைக்கு அருகே உள்ள தங்களது தோட்டத்திற்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து ஜெகனின் தாயார் ராணி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்குள்ள மின்கம்பம் அருகே மின்சாரம் தாக்கி உடலில் படுகாயங்களுடன் ஜெகன் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த ராணி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஜெகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.