தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

திருவண்ணாமலையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-20 18:04 GMT

திருவண்ணாமலை தாலுகா பள்ளிகொண்டாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 35). இவர் திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அவர் திருவண்ணாமலை தீபம் நகர் பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றார்.

தொடர்ந்து போலீசார் துரத்தி சென்றனர். இதனால் தங்கவேல் தவறி கீழே விழுந்ததில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் பிடித்து கைது செய்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சிகிச்சைக்கு பின்னர் அவரை போலீசார் சிறையில் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்