போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ரேஸ்கோர்ஸ்
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29), தொழிலாளி. இவருடைய மனைவி ஹர்ஷினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஹர்ஷினி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
இதையடுத்து கார்த்திக், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச்செல்ல மாமனார் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஹர்ஷினி மற்றும் குழந்தைகளை கார்த்திக்குடன் அனுப்பி வைக்க அவர்கள் மறுத்ததாக தெரிகிறது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகாரும் செய்யப்பட்டது.
இந்த நிலை யில் தனது மனைவியின் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றிய கார்த்திக், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர் போராட்டத்தை கைவிட்டார்.
இதைத்தொடர்ந்து கார்த்திக், அவருடைய மனைவி, மாமனார், மாமியார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.