தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சூலூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சூலூர், செப்.18-
கோவை அருகே உள்ள அன்னூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 21). இவருக்கும் கோவையை சேர்ந்த இலக்கியா என்பவருக்கும் கடந்த 11 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழ்வாணன் சூலூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். இதையடுத்து அவர் தனது மனைவியுடன் தொழிற்சாலை அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.
சம்பவத்தன்று இலக்கியா கடைக்கு சென்றதாக தெரிகிறது. இதற்கிடையில் வீட்டில் இருந்த தமிழ்வாணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய இலக்கியா வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது, தமிழ்வாணன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.