திண்டுக்கல் கோர்ட்டில் வாலிபர் சரண்
தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.
திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் அருளானந்த பாபு (வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 7-ந்தேதி இவர், திண்டுக்கல் ஆர்.வி.நகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகுப்பட்டியை சேர்ந்த வெஸ்லின் அபிஷேக் (23), கிஷோர் வேளாங்கண்ணி (24), சரத்குமார் (24), சைமன் செபாஸ்டின் (22), நாகல்நகரை சேர்ந்த இமாம் முகமது (29), கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த முகேஷ்குமார் என்ற ரெட் (24) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் அருளானந்த பாபு கொலை வழக்கு தொடர்பாக முத்தழகுப்பட்டியை சேர்ந்த நவீன்ராஜா (33) என்பவர் திண்டுக்கல் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு சவுமியா மேத்தீவ் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.