கோவையில் வெடிபொருட்களுடன் சிக்கிய வாலிபர்: என்.ஐ.ஏ. விசாரணைக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்

கோவையில் வெடிபொருட்களுடன் சிக்கிய வாலிபரை என்.ஐ.ஏ. விசாரணைக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-23 21:18 GMT

கோவை,

கோவையில் கார் வெடிப்பு, மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கோவை குரும்பபாளையம், வில்லேஜ் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது35) என்பவர் ஆன்லைனில் பொட்டாசியம் நைட்ரேட் 100 கிராம், சல்பர் 100 கிராம் ஆகிய வெடி பொருட்களை வாங்கி உள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பழ வியாபாரம்

இதைத் தொடர்ந்து செந்தில்குமாரை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்துக்கு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். அங்கு வந்த செந்தில்குமாரிடம் நடத்திய விசாரணையில், அவர் கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் அருகில் சாலையோரம் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வருவதாகவும், என்னிடம் பணிபுரியும் மாரியப்பன் (26) என்பவர், எனது செல்போன் மூலம் ஆன்லைனில் பொருட்கள் வாங்கி உள்ளார். ஆனால் வெடிபொருட்கள்தான் ஆர்டர் பெற்றார் என்பது எனக்கு தெரியவில்லை என்றார்.

கொலை முயற்சி வழக்கு

இதையடுத்து மாரியப்பனை அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கோமதி என்பவரது மகன் என்பதும், மாரியப்பன் மீது அவரது சொந்த ஊரில நடந்த தாக்குதல் சம்பவத்தில் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும், கஞ்சா விற்ற வழக்கில் சிறைக்கு சென்று வெளியேவந்ததும், பின்னர் செந்தில்குமார் கடையில் வேலை பார்த்தபோது ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கியதும், அந்த வெடிபொருட்கள் அவரிடம் இருந்ததும் தெரியவந்தது.

குண்டு தயாரிக்க முயற்சி

மேலும் அந்த வெடி பொருட் களுடன் தனது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்று, முன்விரோதம் காரணமாக மகாராஜா என்பவர் தரப்பினரை பழி வாங்க வெடிகுண்டு தயாரிக்க முயன்றுள்ளார். ஆனால் அங்கு சூழ்நிலை சரி இல்லாத காரணத்தால், வெடிபொருட்களுடன் சென்னை கோயம்பேடு சென்று அங்குள்ள ஒரு லாரி சர்வீசில் வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு மீண்டும் கோவைக்கு வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு மாரியப்பன், செந்தில்குமார் ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சரவணம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் மாரியப்பன் வைத்திருந்த வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். செந்தில்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்