சொத்து தகராறில் வாலிபர் அடித்துக்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-05-15 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

சொத்து தகராறு

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சுரேஷ் என்கிற இளையராஜா(வயது 36). இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு அவரது தந்தை ஏழுமலையை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இளையராஜாவின் குடும்பத்திற்கு கடன் பிரச்சினை அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் கடனை அடைப்பதற்காக நேற்று மாலை இளையராஜா குடிபோதையில் அவரது அண்ணன் கமலக்கண்ணன்(42) என்பவரிடம் சொத்தை பிரித்து கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அடித்துக்கொலை

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன், இளையராஜாவை கையால் அடித்தும், கால்களால் மிதித்தும் பயங்கரமாக தாக்கினார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இளையராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுபற்றிய தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் கமலக்கண்ணனை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு வந்தபோது அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து கமலக்கண்ணனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் விழுப்புரம் பஸ் நிலையம் அருகே நின்றிருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சொத்து தகராறில் தம்பியை அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்