போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
நாகர்கோவில்,
ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமியின் உடல்நிலை சம்பவத்தன்று பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மாவட்ட குழந்கைகள் பாதுகாப்பு அலுவலர் பானு தலைமையில் அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த சிறுமிக்கும், செண்பகராமன்புதூரை சேர்ந்த ஆதி கண்ணன் (வயது 34) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த வாலிபர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஆரல்வாய்மொழி பகுதியில் சிறுமியும், வாலிபரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆதிக்கண்ணனை நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.