மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர் கைது
நாகர்கோவிலில் நடத்தை சந்தேகத்தால் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடத்தை சந்தேகத்தால் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நடத்தையில் சந்தேகம்
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆண்டனி பெனிஸ்டர் (வயது 30). புதிய வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பத்மா (30). இவர்கள் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. அதாவது பத்மாவின் மீதான நடத்தையில் ஆண்டனி பெனிஸ்டருக்கு ஏற்பட்ட சந்தேகம் தான் அவர்களுடைய நிம்மதியை கெடுத்தது.
இதனால் காதல் திருமணம் கசந்து இருவரும் பிரிந்து விடலாமா? என்ற நிலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகு பத்மா யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த ஆண்டனி பெனிஸ்டர், பத்மாவை கண்டித்துள்ளார். பதிலுக்கு அவர் உதாசீனப்படுத்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது. இதில் கோபித்துக் கொண்டு ஆண்டனி பெனிஸ்டர் வீட்டை விட்டு வெளியே சென்றதாக தெரிகிறது.
பெண் மயங்கி கிடந்தார்
இந்தநிலையில் காலை 10 மணிக்கு பத்மாவை தையல் வகுப்புக்கு அழைத்து செல்வதற்காக அவருடைய தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு பத்மா பேச்சு, மூச்சு இன்றி படுக்கையில் மயங்கி கிடந்தார். வெகுநேரம் எழுப்பியும் அவர் எழும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது பத்மா பிணமாக கிடந்தது தெரியவந்தது. ஆனால் அவரது உடலில் எந்த காயமும் இல்லை. எனவே பத்மா தற்கொலை செய்திருக்கலாம் என்று முதலில் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் பத்மா மர்மமான முறையில் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கணவர் கைது
முதற்கட்டமாக பத்மாவின் கணவர் ஆண்டனி பெனிஸ்டரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஆண்டனி பெனிஸ்டர் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்து சரண் அடைந்தார்.
அப்போது தன்னுடைய மனைவி பத்மாவை நான் தான் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் ஆண்டனி பெனிஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை அவருடைய கணவரே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.