செல்போன்களை திருடிய வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் செல்போன்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-17 18:45 GMT


நெல்லை மாதவகுறிச்சி வல்லவன் கோட்டை காலனிதெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் கதிரேசன் (வயது 42). இவர் ராமநாதபுரம் வ.உ.சி நகர் 7-வது தெருவில் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நடராஜன் தன்னுடன் வேலைபார்க்கும் நண்பர்களுடன் ராமநாதபுரம் பஸ்நிலைய பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது கையில் கொண்டு சென்ற செல்போனை கடையின் மேஜை மீது வைத்து விட்டு டீ குடித்து கொண்டிருந்தார். அந்த சமயம் அருகில் வந்து நின்ற வாலிபர் ஒருவர் அந்த செல்போனை நைசாக எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத நடராஜன் உள்ளிட்டோர் அந்த வாலிபரை விரட்டி சென்ற மடக்கி பிடித்தனர். அவரிடம் நடராஜனின் செல்போன் தவிர மற்றொரு செல்போனும் இருந்தது. அதுகுறித்து கேட்டபோது அவர்களின் நண்பர்கள் தூங்கி கொண்டிருந்தபோது அங்கு இருந்து எடுத்ததாக தெரிவித்தார். இதனால் அவரது நண்பர்களை எழுப்பி கேட்டபோது அது பவுன்ராஜ் என்பவரின் செல்போன் என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து 2 செல்போன்களை திருடிய நபரை ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில்தெருவை சேர்ந்த முனியசாமி மகன் சதீஷ்குமார் (32) என்பது தெரிந்தது. 2 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்