செஞ்சி அருகேசாமியாரை கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற வாலிபர் கைதுபரிகாரம் செய்தும் திருமணம் ஆகாததால் ஆத்திரம்

செஞ்சி அருகே பரிகாரம் செய்தும், திருமணம் ஆகாததால் ஆத்திரமடைந்து சாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-29 18:45 GMT

செஞ்சி, 

கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் அடராப்பட்டு கிராமத்தில் குறி சொல்லும் மையம் நடத்தி வருபவர் இஸ்தானந்தா என்ற சரவணன்(வயது 42). சாமியாரான இவர் கடந்த 27-ந்தேதி இரவு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் ஏரி அருகே உள்ள காளி அம்மன் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு குறி சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் சிறுநீர் கழிப்பதற்காக கோவில் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த செஞ்சி அடுத்த ஒதியத்தூரை சேர்ந்த பச்சையப்பன் மகன் திருமால்(35) என்பவர் திடீரென சாமியாரை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த சாமியார் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வாலிபர் கைது

மேலும் இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து சாமியார் சரவணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் செஞ்சி ஒதியத்தூரை சேர்ந்த பச்சையப்பன் மகன் திருமால்(35) என்பவர் சாமியாரை அணுகி திருமண தடை அகல பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சாமியார் திருமாலிடம் ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு காளி கோவிலில் பரிகார பூஜை செய்துள்ளார். இருப்பினும் நீண்ட நாட்கள் ஆகியும் திருமாலுக்கு திருமணம் ஆகவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த திருமால் சாமியார் சரவணனை காளி கோவிலுக்கு வரவழைத்து தான் கொடுத்த ரூ.1 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் சாமியாருக்கும், திருமாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த திருமால் சாமியாரை கத்தியால் குத்திக் விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருமாலை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்