பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-02 19:28 GMT

காதல்

பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய பட்டதாரி பெண்ணுக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசுவின் மகன் கிஷோர்குமார் (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. அந்த பெண்ணை விட கிஷோர்குமார் 2 வயது குறைந்தவராக இருப்பினும், கடந்த 3½ வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

கிஷோர்குமார், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகியதால், அந்த பெண் கர்ப்பமடைந்தார். இதையடுத்து, கிஷோர்குமாரின் அத்தை முறை உறவினரான சித்ரா, அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது.

2 பேர் கைது

இந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த ெபண், கிஷோர்குமாரிடம் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் கிஷோர்குமார், அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் அவரது தாய் அமுதா (50), தம்பி ஹரிசங்கர் (22) ஆகியோர் அந்த பெண்ணை தவறாக பேசி, அவரை தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார், கிஷோர்குமார் மீது பாலியல் பலாத்காரம், எஸ்சி.எஸ்டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் கிஷோர்குமாரின் அத்தை சித்ராவும் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்