7 கிலோ மான் கறி வைத்திருந்த வாலிபர் கைது
திண்டிவனத்தில் 7 கிலோ மான் கறி வைத்திருந்த வாலிபர் கைது
திண்டிவனம்
திண்டிவனம் நத்தமேடு நரிக்குறவர் காலனியில் வீட்டில் வைத்து மான் கறியை விற்பனை செய்வதாக திண்டிவனம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஷ் தலைமையில் வனவர் பாலசுந்தரம், வனக்காப்பாளர்கள் சிவகுமார், பிரபு உள்ளிட்ட வனத்துறையினர் நத்தமேடு நரிக்குறவர் காலனிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் மான் கறி விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் அஜித்(வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் திருவண்ணாமலை அருகில் உள்ள பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் இருந்து மான் கறியை வாங்கி வந்து விற்பனை செய்ததாகவும் வனத்துறையினரிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து அஜித்தை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்து 7 கிலோ மான் கறியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் திருவண்ணாமலையை சேர்ந்த சதீஷ்குமாரிடம் மான் கறி வாங்கி வந்ததாக அஜித் கூறியதால், மான்களை வேட்டையாடி கொன்று அவற்றின் இறைச்சியை வெளியூர்களுக்கு அனுப்பி வைத்து விற்பனை செய்யப்படலாம் என வனத்துறையினர் சந்தேகிப்பதால் சதீஷ்குமாரை பற்றி வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.