சிறுமிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது
பண்ருட்டியில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது
பண்ருட்டி
பண்ருட்டி எஸ்.ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் சுந்தர்சீனு(வயது 23). ஐ.டி.ஐ. முடித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியிடம் நண்பராக பேசி வந்ததாக தெரிகிறது. இதை பயன்படுத்தி சுந்தர்சீனு, அந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் உன்னை நான் காதலிக்கிறேன், என்னை நீ காதலிக்க வேண்டும் என்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுத்து விட்டார். இருப்பினும் கடந்த 2 மாதமாக சிறுமி, வரும் போதும், போகும் போதும் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் அங்குள்ள மினி குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்ற போது, மீண்டும் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது பற்றி சிறுமி பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்சீனுவை கைது செய்தனர்.