ஆள் மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலம் மோசடி வாலிபர் கைது

ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் தயாரித்தும் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்று மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-07 21:42 GMT

ஆவடி,

சென்னை கே.கே.நகர் 9-வது செக்டர், 50-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 31). இவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி, கோகுலம் காலனி, ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் தியாகராஜன் மற்றும் கல்யாணி ஆகியோருக்கு சொந்தமான காட்டுப்பாக்கம் செந்தூர்புரம் பகுதியில் உள்ள 2350 சதுர அடி கொண்ட காலி மனையை எனக்கு ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணம் தயாரித்து விற்று ரூ.1 கோடி 7 லட்சம் மோசடி செய்துவிட்டார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

வாலிபர் கைது

இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் போலி ஆவண தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் இந்த மோசடி தொடர்பாக செந்தில்குமாரை நேற்று கைது செய்து, பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்