பிரபல நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ரூ.2.82 கோடி மோசடி செய்த வாலிபர் கைது

பிரபல நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ரூ.2.82 கோடி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-18 06:03 GMT

சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், சென்னை முகப்பேரை சேர்ந்த பிரதிக் (வயது 32) என்பவர் ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் ஆடை ஷோரூம் கிளையை தொடங்குவதற்கான 'லைசென்சு' வாங்கித்தருவதாக கூறி ரூ.2 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்துவிட்டார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிரதிக் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இதே போன்று பலரிடம் லைசென்சு வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர் பிரதிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்