ரூ.1.20 லட்சம் ஏமாற்றிய வாலிபர் கைது: சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடியில் ஈடுபட்டது அம்பலம்
ரூ.1.20 லட்சம் ஏமாற்றிய வாலிபர் கைது: சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடியில் ஈடுபட்டது அம்பலம்
அஞ்சுகிராமம்,
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது55). இவர் கோட்டாரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று முருகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர் எனது நகையை அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்துள்ளேன். அதனை மீட்டு விற்பனை செய்ய ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் தேவை. நீங்கள் பணத்தோடு வந்தால் நகையை மீட்டு பெற்றுச்செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். அதை நம்பி முருகன் பணத்துடன் அவர் கூறிய வங்கி முன்பு சென்றார். அப்போது அங்கு வந்த அந்த நபர் அவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முருகனை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பி சென்றார். இதுகுறித்து முருகன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் சிவராம மங்கலத்தை சேர்ந்த தாமஸ் மகன் ரிஷப் சங்கர் (வயது 25) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது ரிஷப் சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை பார்த்துள்ளார். பின்னர் ஊருக்கு வந்த அவர் மீண்டும் வேலைக்கு செல்லாமல் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அதாவது ஸ்ரீவைகுண்டம், மேலப்பாளையம், மானூர், ஏர்வாடி ஆகிய போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் உள்ளது தெரிந்தது.
மேலும் அவர் விலை உயர்ந்த ஆடைகள், செருப்புகள் அணிவதில் மிகுந்த விருப்பம் உள்ளவராக இருந்து வந்துள்ளார். இன்னும் திருமணம் ஆகாததால் திருமணம் செய்யவும் முயற்சி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ரிஷப் சங்கரை நாகர் ேகாவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.