அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-19 18:45 GMT

ராமநாதபுரத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாக்குவாதம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளையில் டிரைவராக பணியாற்றி வருபவர் அந்தோணிசாமி (வயது50). இவர் கண்டக்டர் ஜவகர் என்பவருடன் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து அரசு பஸ்சில் ராமநாதபுரம் வந்துள்ளார். பழைய பஸ்நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அடுத்த பயணத்திற்கு நேரம் உள்ளதால் அங்கு பஸ்சை நிறுத்திவிட்டு காத்திருந்துள்ளார்.

அப்போது ராமநாதபுரம் மகர்நோன்பு பொட்டல் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் அஜித் (24) என்பவர் பஸ்சில் ஏறி உட்கார்ந்துள்ளார். இதனை கண்ட டிரைவர் அந்தோணிசாமி பஸ் கிளம்ப இன்னும் நேரம் உள்ளதால் சிறிது நேரம் கழித்து ஏறுமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட அஜித் அரசு பஸ்சில் ஏறுவதை தடுக்க நீ யார்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தாராம். இதனால் டிரைவர் அரசு பஸ்சை இங்கு நிறுத்துவதற்கு பதில் டெப்போவில் சென்று நிறுத்திவிடலாம் என்று புறுப்பட்டுள்ளார்.

கண்ணாடி உடைப்பு

அவர்களை பின்தொடர்ந்து சென்ற அஜித் பஸ்சில் ஏறி உள்ளே செல்லவிடாமல் தடுத்து டிரைவரை அவதூறாக பேசி கையால் மார்பில் குத்தி உள்ளார். அவர் கத்தி கூச்சலிடவே பஸ்சில் இருந்து இறங்கிய அஜித் பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கியுள்ளார். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதுகுறித்து டிரைவர் அந்தோணிசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்