போலீஸ் ஏட்டை தாக்கிய வாலிபர் கைது
கோவையில் பணியில் இருந்தபோது போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் பணியில் இருந்தபோது போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
கோவை ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சந்திரன். இவர் சம்பவத்தன்று ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் பிரிவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து அவரிடம் வாகனத்துக்குரிய ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் ஆகியவை உள்ளதா? என்று கேட்டார். ஆனால் அவர் உரிய ஆவணங்களை போலீசாரிடம் கொடுக்காமல், ஆத்திரத்தில் ஏட்டு சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
வாலிபர் கைது
இதுகுறித்து ஏட்டு சந்திரன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில், ஏட்டை தாக்கியது புலியகுளம் பகுதியை சேர்ந்த ரோகித் தினகரன் (வயது 24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரோகித் தினகரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரோகித் தினகரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.