தண்டையார்பேட்டையில் ரூ.50 லட்சம் போதை பவுடர் சிக்கியது வாலிபர் கைது
தண்டையார்பேட்டையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான உயர்ரக போதை பவுடருடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தண்டையார்பேட்டை,
தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் பகுதியில் மர்மநபர்கள் சிலர் உயர்ரக போதை பவுடரை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் தகவலின்படி, தண்டைார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதைப் கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக வாலிபர் பதில் அளித்தார்.
இதனால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுக்கவே, வாலிபரை தீவிரமாக சோதனை செய்தனர்.
போதை பவுடர் பறிமுதல்
அப்போது அவரிடம் உயர்ரக போதை பவுடர் இருந்தது தெரியவந்தது. உடனே வாலிபரை தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தியதில், அவர் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த அப்துல்கரீம் (வயது 24) என்பது, சட்டவிரோதமாக (மெத்தமகுலோன்) போதை பவுடரை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 650 கிராம் உயர்ரக போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பவுடரின் மதிப்பு ரூ.49 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அப்துல்கரீம் மீது தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து கோட்டில் ஆஜர்படுத்தி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அப்துல்கரீம் சரித்திர குற்றவாளி என்பதும், அவர் மீது கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.