போலீஸ் தேடிய வாலிபர் கைது

குடவாசல் அருகே சொத்து தகராறில் தாய்- மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-31 18:43 GMT

குடவாசல், ஜூன்.1-

குடவாசல் அருகே சொத்து தகராறில் தாய்- மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சுமைதூக்கும் தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது55). இவர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அவருடைய அண்ணன் அதே ஊரை சேர்ந்த ஆரோக்கியதாசுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.சம்பவத்தன்று அந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆரோக்கியதாசின் மகன்கள் அன்பழகன், செபஸ்டின் ஆகிய 2 பேரும் கலந்துகொண்டனர். இதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஸ்கர் மகன் அஜய் (19) என்பவரும் வந்துள்ளார்.

கத்தியால் குத்திக்கொலை

அப்போது செபஸ்டின், அஜய்யை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அஜய் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.இந்த தகவல் அறிந்து அஜயின் தாய் அலங்காரமேரி (55) அங்கு ஓடி வந்தார். அவரை செபஸ்டினின் அண்ணன் அன்பழகன்(38) கத்தியால் குத்தினார். இதில் அலங்காரமேரியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து செபஸ்டின், அன்பழகன் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவருடைய தம்பி செபஸ்டின் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.இந்தநிலையில் நேற்று முன்தினம் செபஸ்டின் கும்பகோணம் கோர்ட்டில் சரணடைந்தார். நேற்று முன்தினம் இரவு அன்பழகன் வடவேரில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் தனியாக அமர்ந்து இருந்தார். அப்போது குடவாசல் போலீசார் அன்பழகனை கைதுசெய்து திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்