சமூக வலைதளங்களில் புகைப்படத்தை திருடி ஆபாச பேச்சு-சைபர்கிரைம் போலீசில் இளம் பெண்கள் புகார்

சமூக வலைதளங்களில் புகைப்படத்தை திருடி ஆபாசமாக பேசுவதாக சைபர்கிரைம் போலீசில் இளம்பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-04-25 17:31 GMT

வேலூர்

சமூக வலைதளங்களில் புகைப்படத்தை திருடி ஆபாசமாக பேசுவதாக சைபர்கிரைம் போலீசில் இளம்பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இளம் பெண்கள் புகார்

பெருகி வரும் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் சமீபத்தில் 3 இளம்பெண்கள் தங்களது புகைப்படத்தை தவறாக மர்மநபர்கள் பயன்படுத்துவதாக புகார்கள் அளித்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

பெண்கள் மீதான குற்ற சம்பவங்களை தடுக்க கல்லூரிகள், பள்ளிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதில் தெரியாத நபர்களுக்கு புகைப்படத்தை அனுப்ப வேண்டாம். வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவிட வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்படுகிறது.

எனினும் பலர் புகைப்படத்தை பதிவிடுகின்றனர். அந்த படத்தை தவறாக சிலர் பயன்படுத்துகின்றனர். அதன்படி வேலூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளம்பெண்கள் கடந்த வாரங்களில் புகார்கள் அளித்தனர். அந்த புகார்கள் அனைத்தும் ஒரே வகையான பிரச்சினையை சார்ந்ததாகவே உள்ளது.

ஆபாசமாக பேச்சு

அதாவது இந்த இளம்பெண்கள் தங்களது படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதை மர்மநபர்கள் சேகரித்து அந்த இளம்பெண் பெயரிலேயே வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி உள்ளனர்.

அந்த கணக்குகள் மூலம் அந்த பெண்ணின் நண்பர்கள் வட்டாரத்தை தொடர்பு கொண்டு அந்த பெண் பேசுவது போன்றே ஆபாசமாக பேசி உள்ளனர். அந்த பெண்ணின் நண்பர்களும் அதை நம்பி பேசி உள்ளனர். இதுகுறித்து அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. அதுகுறித்த புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பெண்ணின் படத்தை எடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே பெண்கள் யாரும் தங்களது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்