பிரசவத்தில் இளம் பெண் சாவு; உறவினர்கள் போராட்டம்

சாயல்குடி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது இளம்பெண் இறந்ததாக கூறி உறவினர்கள் ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-10 18:43 GMT

சாயல்குடி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது இளம்பெண் இறந்ததாக கூறி உறவினர்கள் ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிரசவத்தில் பெண் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த கோவிலாங்குளம் அருகே உள்ளது பறையங்குளம். இந்த ஊரைச் சேர்ந்த காளிமுத்து மனைவி சித்ராதேவி (வயது 20). நிறைமாத கர்ப்பணியான சித்ராதேவியை பிரசவத்திற்காக நேற்று கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாத நிலையில் செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதில் சித்ராதேவிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் வயிற்று வலி அதிகமாகி அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே சித்ராதேவி இறந்ததாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சாலை மறியல்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பிரசவம் பார்த்ததாலேயே சித்ராதேவி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உரிய புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்