ஆர்வத்தால் ஆபத்தை தேடும் இளைஞர்கள்
ஒரு நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கும் 'காமிரா'க்கள் அரிதாகப் பார்க்கப்பட்டன. புகைப்படக் கலைஞர்கள் பெரிதாகப் பார்க்கப்பட்டனர்.
இன்று தொழில்நுட்பப் புரட்சியால் செல்போன்கள் வைத்து இருப்பவர்கள் அனைவருமே புகைப் படக்காரர்கள்தான். ஐந்து வயது குழந்தைகூட ஒரு காட்சியை செல்போனில் படம் எடுத்துவிட முடிகிறது.
செல்போன்கள் மூலம் படம் எடுக்கிற மோகம் பெரியவர் முதல், சிறியவர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.
'செல்பி' மோகம்
அதிலும் செல்போனில் 2 பக்கமும் படம்பிடிக்கிற காமிரா வசதி, என்று வந்ததோ அன்று முதல் சுயமாக நம்மைப் படம் எடுத்துக் கொள்கிற 'செல்பி' என்கிற மோகம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டுவிட்டது.
திருமண விழாக்களில் மணமக்களுடன் இணைந்து 'செல்பி', பொது இடங்களில் பிரபலங்களை கண்டுவிட்டால் ஆர்வத்தில் அவர்களுடன் 'செல்பி', சுற்றுலாத் தலங்களுக்கு சென்றால் இயற்கை எழில்மிகு காட்சிகளுடன் 'செல்பி', ஏன்? உயிரிழந்த சடலங்கள் முன்பு இருந்துகூட 'செல்பி' எடுக்கிற அளவில் 'செல்பி' இன்று அதுவும் இளைய தலைமுறையினரை ஆட்டிவித்து வருகிறது.
புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிகம் 'லைக்ஸ்' பெற வேண்டும் என்ற ஆசையில், ஆர்வத்தில் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.
உயிருக்கு உலை
இவ்வாறாய் ஓடும் ரெயில் முன்பு, பாறையின் மேல் நின்று, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்ற காலங்களில் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்க முயன்று பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.
இருந்தும் மக்களிடையே 'செல்பி' மோகம் குறைந்தப்பாடில்லை. சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 150 அடி உயரப் பாறையின் மேல் நின்று மணப்பெண் ஒருவர் 'செல்பி' எடுக்க முயன்றபோது கால் தவறி கல்குவாரி தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். அவரை சினிமா கதாநாயகன் போல் மணமகன் தனது உயிரைத் துச்சமென நினைத்து கீழே குதித்து காப்பாற்றினார்.
இந்தச் சம்பவம் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதால் ஏற்படும் விபரீதத்தை எடுத்துக் காட்டும் எச்சரிக்கையாக அமைந்தது.
உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் 'செல்பி' மோகம், இளைஞர்களிடம் குறையுமா ? என்பது பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-
போதைப் பழக்கம் போன்று...
திரைப்பட நடிகை கஸ்தூரி:-
எல்லோரது வாழ்க்கையிலும் செல்போன் இப்போது நீக்கவே முடியாத அங்கமாகிவிட்டது. ஒரு காலத்தில் செல்போன் நம்மிடம் இல்லை. இப்போது செல்போன் இல்லாமல் நாமே இல்லை. செல்போன் இல்லாத காலம் என்பது இனி நினைவில் இருக்கவும் போவதில்லை.
செல்போன் நல்லதா, கெட்டதா? 'செல்பி' என்பது நல்லதா, கெட்டதா? என்பதை யோசிக்கும் காலத்தை நாம் எப்போதோ தாண்டிவிட்டோம். அது பற்றிய யோசனைகளை கடந்து, தற்போது செல்போனுடன் வாழப் பழகிவிட்டோம். செல்போன் பயன்பாடு என்பதும், 'செல்பி' எடுப்பதும் என்பதும் அவரவர் நாரிகத்தைப் பொறுத்த விஷயமாகும்.
'செல்பி' என்ற விஷயம், இப்போது மூச்சுக்காற்று போல பரவலாகி விட்டது. வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. 'செல்பி' எடுப்பதை தவறு என்று சொல்லவே மாட்டேன். ஆனால் அதன் போக்கு மாறிவிடக்கூடாது. அதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.
உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்:-
'செல்பி' எடுக்கும் பழக்கத்துக்கு இளைய தலைமுறையினர் பலர் அடிமையாகி உள்ளனர். சமுதாயத்தில் தனக்கு என்று ஒரு அங்கீகாரம் மற்றும் அடையாளத்தை தேடிச் செல்பவர்களே சமூக ஊடகங்களில் கிடைக்கும் வெறும் 'லைக்', 'ஷேர்', 'கமென்ட்' போன்றவற்றுக்காக ஆபத்தை உணராமல் விபரீதமான முறையில் 'செல்பி' எடுக்கிறார்கள்.
மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, எல்லோரையும் விடவும் வித்தியாசமாக இருக்கவேண்டும். அனைவரின் பார்வையும் நம் மீது திரும்பி உடனடியாகப் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற செயல்களில் ஆபத்தை உணராமல் ஈடுபடுகிறார்கள். செல்பிக்காக உயிரை இழப்பது என்பது நமக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. எனவே இந்த மோகத்துக்கு அடிமையாகாமல் இருப்பதற்கு சுய கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும்.
தங்கள் பிள்ளைகளின் செல்போன்களை பெற்றோர் தொடர்ச்சியாக கண்காணித்து, அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு தேவையான அறிவுரைகளை அவ்வப்போது வழங்கவேண்டும். செல்பி மோகத்தில் இருந்து விடுபடவேண்டும் என்றால், தங்களுடைய எண்ணத்தையும், சிந்தனையையும் வேறு பல நல்ல வழிகளில் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தவேண்டும்.
கட்டுப்பாடு அவசியம்
கறம்பக்குடியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி சிவஸ்ருதி:- இன்றைய நவீன உலகில் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாட்டை தவிர்க்க முடியாது. இளம் வயதில் கொண்டாட்டங்கள் மற்றும் நினைவுகளை பதிவு செய்து வைப்பது சரியானது தான். அதே வேளையில் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலும் தவிர்க்கப்பட வேண்டும். சமீபகாலமாக ஆபத்தான இடங்களுக்கு எச்சரிக்கையை மீறி சில இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று செல்பி எடுப்பதும், அதனால் பாதிக்கப்படுவதும் வேதனையாக உள்ளது. மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்து செல்பி எடுப்பவர்களால் இன்றைய இளைய தலைமுறையினர் குறித்த நன்மதிப்பு சமூகத்தில் கேள்விகுறியாகி விட்டது. எனவே செல்பி எடுப்பதில் கட்டுப்பாடு மிக அவசியம்.
படிக்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது
விராலிமலையை சேர்ந்த அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவி கமலி:-
செல்போன் பயன்பாடு என்பது தற்போது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதன் மூலம் பல வகையில் நன்மைகள் இருந்தாலும் பல வகையில் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாகவும் உள்ளது. காரணம் பள்ளி காலங்களிலேயே செல்போன் பயன்படுத்துவதால் படிக்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது. சிறுவயதிலேயே தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதாக நினைத்துக் கொண்டு ஆபத்தின் விளிம்பில் சென்று செல்பி எடுப்பது, உயிரைக் கொல்லும் மிருகங்களின் அருகில் சென்று, ஓடும் ரெயில் முன்பு, மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சாகசம் செய்து செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த செல்பி மோகத்தால் பலர் மன நோயாளிகளாக மாறிவிடும் நிலை தற்போது உள்ளது. குறிப்பாக பெண்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் போது அதனை சமூகவலைதள விரோதிகள் அந்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலையும் உள்ளது. எனவே பெண்கள் அதனை புரிந்து செயல்பட வேண்டும்.
மனிதாபிமானம் குறைந்துவிட்டது
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- செல்பி மோகத்தால் இளைஞர்கள் ஆபத்தை உணராமலேயே செல்பி எடுக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் போதும் ஒரு கையில் செல்போன் வைத்து செல்பி எடுப்பது. மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று ஒரு சக்கரத்தை மட்டும் தூக்குவது போன்ற ஆபத்தான சாகசங்களை செய்து செல்பி எடுக்கின்றனர். மேலும் ஆபத்தான பகுதி, பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று செல்பி எடுக்கின்றனர். இதுகுறித்து பல முறை எச்சரித்தும் இளைஞர்கள் கேட்பதாக இல்லை. மேலும் விதியை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த செல்பி மோகத்தால் மனிதாபிமானம் குறைந்துவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சிறப்பம்சங்கள் அதிகம்
கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் சையது இப்ராகிம்:-
தற்போது இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஓடும் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதும், மலைகளில் நின்று கொண்டும் செல்பி எடுக்கின்றனர். மேலும் ரெயில் பயணங்களின் போதும் செல்பி எடுக்கின்றனர். இப்படி ஆபத்தான இடங்களில் பலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கின்றனர். இதற்கு முழு காரணம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் தான். ஒவ்வொரு கம்பெனியும் செல்பி எடுப்பதற்காகவே தனித்துவமான ஆண்ட்ராய்டு போன்களை அறிமுகப்படுத்துகின்றனர். இதனை அதிக இளைஞர்கள் வாங்கி சென்று ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கப்போகயில் உயிரை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. ஆனால் பழைய ஆண்ட்ராய்டு செல்போன்களில் செல்பி எடுக்க வசதி இல்லாததால் அப்பொழுது இது போன்ற விபத்துகள் எங்கேயும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களில் தான் எண்ணற்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இதனாலேயே இளைஞர்கள் செல்பி எடுக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிணத்தின் அருகிலும் செல்பி எடுக்கின்றனர்
புதுக்கோட்டையில் ஸ்டூடியோ நடத்தும் ஞானசேகர்:- உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. ஆற்றங்கரையில் நின்றால் செல்பி, அருவி பகுதியில் நின்றால் செல்பி, கடற்கரை பகுதியில் நின்றாலும் செல்பிதான். இப்படி செல்பி எடுக்கும்போது எவ்வளவோ பேர் உயிரிழந்து வருதையும் கண்கூடாக பார்த்து வருகிறோம். தண்டவாளத்தில் ரெயில் வரும் போதும் ஓடிக்கொண்டிருக்கும் ரெயிலின் வெளியேயும் தலையை நீட்டிக் கொண்டு கூட செல்பி எடுக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே சொன்னால் பிணத்தின் அருகிலும் செல்பி எடுக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி செல்பி மோகம் அதிகமாக உள்ளது. செல்போன் என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இளைஞர்கள் அதை நல்ல செயலுக்கு பயன்படுத்துவதைவிட ஆபத்து நிறைந்த செயலுக்கு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகும். கேமராக்கள் பொருத்தப்பட்ட செல்போன்கள் விற்பனைக்கு வந்த பின்னர் புகைப்பட தொழில் நலிவை சந்திக்க தொடங்கியது. தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப நாங்களும் எங்கள் தொழிலை மாற்றி வருகிறோம். கேமரா செல்போன் வைத்திருக்கும் அனைவரும் புகைப்படக்காரர்கள் போன்று மாறி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தண்டனை விதிக்கப்படுமா?
சினிமா, விளையாட்டு பிரபலங்களிடம் 'செல்பி' மோகம் அதிகம் இருக்கவே செய்கிறது. அதே நேரத்தில் தங்களது அனுமதி இல்லாமல் 'செல்பி' எடுப்பதை விரும்பாத பிரபலங்களும் இருக்கிறார்கள். நடிகர் சிவகுமார் தன்னிடம் 'செல்பி' எடுக்க முயன்ற நபரின் செல்போனை பறித்து வீசிய சம்பவமும் நினைவுக் கூறத்தக்கது.
'செல்பி' மோகத்தால் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுக்கக் கூடாது என்று அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீறுபவர்களுக்கு அபாரதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கைகளும் விடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
'செல்பி' படம் கண் சிமிட்டியது
முதலில் எப்போது தெரியுமா?
'செல்பி' இன்று, நேற்று அல்ல 183 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், நம்பித்தான் ஆகவேண்டும்! அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா நகரத்தில் பிரபல புகைப்பட ஆர்வலரான ராபர்ட் கார்னெலியஸ் தனது கேமராவில் இருந்து பின்னோக்கி படம் எடுத்தார். இதுதான் உலகிலேயே முதல் 'செல்பி' என்று கருதப்படுகிறது.
அதன் பின்னர் 1990-களில் கிழக்கு ஆசிய நாடுகளில் 'செல்பி' பிரபலமாகியது. 2000 ஆண்டுக்கு பின்னர்தான் இந்தியாவில் பரவலாக 'செல்பி' படம் கண் சிமிட்டியது.
2013-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு அகராதியில் 'செல்பி' என்ற வார்த்தை புதிதாகச் சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச 'செல்பி' தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இதில் கவனிக்கத்தக்க தகவல் ஆகும்.
சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற வீடியோ எடுத்த போது பரிதாபம்:
கல்குவாரியில் மூழ்கி இறந்த என்ஜினீயரிங் மாணவர்
புதுக்கோட்டை நகரில் அக்காட்சியாகுளம் பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் பிரகதீஸ்வரன் (வயது 17). இவர் புதுக்கோட்டையில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி விடுமுறை தினத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பிரகதீஸ்வரன், திருக்கோகர்ணம் புதுத்தெருவில் உள்ள கல்குவாரி குளத்தில் குளிக்க சென்றார். அப்போது மலையின் உச்சியில் இருந்து அவர் தண்ணீரில் குதிப்பது போன்று வீடியோவை தனது நண்பர்கள் மூலம் எடுத்தார். இதில் தண்ணீரில் மூழ்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார். அதன்பின் மறுநாள் பிரகதீஸ்வரன் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். ரீல்ஸ் வீடியோ மற்றும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவதற்காக மலையில் பாறையின் உச்சியில் இருந்து குதித்த அவர் பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.