ஆர்வத்தால் ஆபத்தைத் தேடும் இளைஞர்கள்

உயிர் பறிக்கும் ‘செல்பி’ மோக ஆர்வத்தால் இளைஞர்கள் ஆபத்தைத் தேடிக்கொள்கிறாா்கள்.

Update: 2022-12-13 18:45 GMT

ஒரு நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கும் 'காமிரா'க்கள் அரிதாகப் பார்க்கப்பட்டன. புகைப்படக் கலைஞர்கள் பெரிதாகப் பார்க்கப்பட்டனர்.

இன்று தொழில்நுட்பப் புரட்சியால் செல்போன்கள் வைத்து இருப்பவர்கள் அனைவருமே புகைப் படக்காரர்கள்தான். ஐந்து வயது குழந்தைகூட ஒரு காட்சியை செல்போனில் படம் எடுத்துவிட முடிகிறது.

செல்போன்கள் மூலம் படம் எடுக்கிற மோகம் பெரியவர் முதல், சிறியவர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.

'செல்பி' மோகம்

அதிலும் செல்போனில் 2 பக்கமும் படம்பிடிக்கிற காமிரா வசதி, என்று வந்ததோ அன்று முதல் சுயமாக நம்மைப் படம் எடுத்துக் கொள்கிற 'செல்பி' என்கிற மோகம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டுவிட்டது.

திருமண விழாக்களில் மணமக்களுடன் இணைந்து 'செல்பி', பொது இடங்களில் பிரபலங்களை கண்டுவிட்டால் ஆர்வத்தில் அவர்களுடன் 'செல்பி', சுற்றுலாத் தலங்களுக்கு சென்றால் இயற்கை எழில்மிகு காட்சிகளுடன் 'செல்பி',

ஏன்? உயிரிழந்த சடலங்கள் முன்பு இருந்துகூட 'செல்பி' எடுக்கிற அளவில் 'செல்பி' இன்று அதுவும் இளைய தலைமுறையினரை ஆட்டுவித்து வருகிறது.

புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிகம் 'லைக்ஸ்' பெற வேண்டும் என்ற ஆசையில், ஆர்வத்தில் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

உயிருக்கு உலை

இவ்வாறாய் ஓடும் ரெயில் முன்பு, பாறையின் மேல் நின்று, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்ற காலங்களில் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்க முயன்று பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.

இருந்தும் மக்களிடையே 'செல்பி' மோகம் குறைந்தப்பாடில்லை. சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 150 அடி உயரப் பாறையின் மேல் நின்று மணப்பெண் ஒருவர் 'செல்பி' எடுக்க முயன்றபோது கால் தவறி கல்குவாரி தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். அவரை சினிமா கதாநாயகன் போல் மணமகன் தனது உயிரை துச்சமென நினைத்து கீழே குதித்து காப்பாற்றினார்.இந்தச் சம்பவம் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதால் ஏற்படும் விபரீதத்தை எடுத்துக் காட்டும் எச்சரிக்கையாக அமைந்தது. உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் 'செல்பி' மோகம், இளைஞர்களிடம் குறையுமா ? என்பது பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-

போதைப் பழக்கம் போன்று...

திரைப்பட நடிகை கஸ்தூரி:-

எல்லோரது வாழ்க்கையிலும் செல்போன் இப்போது நீக்கவே முடியாத அங்கமாகிவிட்டது. ஒரு காலத்தில் செல்போன் நம்மிடம் இல்லை. இப்போது செல்போன் இல்லாமல் நாமே இல்லை. செல்போன் இல்லாத காலம் என்பது இனி நினைவில் இருக்கவும் போவதில்லை.

செல்போன் நல்லதா, கெட்டதா? 'செல்பி' என்பது நல்லதா, கெட்டதா? என்பதை யோசிக்கும் காலத்தை நாம் எப்போதோ தாண்டிவிட்டோம். அது பற்றிய யோசனைகளை கடந்து, தற்போது செல்போனுடன் வாழப் பழகிவிட்டோம். செல்போன் பயன்பாடு என்பதும், 'செல்பி' எடுப்பதும் என்பதும் அவரவர் நாகரிகத்தைப் பொறுத்த விஷயமாகும்.

'செல்பி' என்ற விஷயம், இப்போது மூச்சுக்காற்று போல பரவலாகி விட்டது. வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. 'செல்பி' எடுப்பதை தவறு என்று சொல்லவே மாட்டேன். ஆனால் அதன் போக்கு மாறிவிடக்கூடாது. அதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.

எச்சரிக்கை மணி

உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்:-

'செல்பி' எடுக்கும் பழக்கத்துக்கு இளைய தலைமுறையினர் பலர் அடிமையாகி உள்ளனர். சமுதாயத்தில் தனக்கு என்று ஒரு அங்கீகாரம் மற்றும் அடையாளத்தை தேடிச் செல்பவர்களே சமூக ஊடகங்களில் கிடைக்கும் வெறும் 'லைக்', 'ஷேர்', 'கமென்ட்' போன்றவற்றுக்காக ஆபத்தை உணராமல் விபரீதமான முறையில் 'செல்பி' எடுக்கிறார்கள்.

மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, எல்லோரையும் விடவும் வித்தியாசமாக இருக்கவேண்டும். அனைவரின் பார்வையும் நம் மீது திரும்பி உடனடியாகப் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற செயல்களில் ஆபத்தை உணராமல் ஈடுபடுகிறார்கள். செல்பிக்காக உயிரை இழப்பது என்பது நமக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. எனவே இந்த மோகத்துக்கு அடிமையாகாமல் இருப்பதற்கு சுய கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும்.

தங்கள் பிள்ளைகளின் செல்போன்களை பெற்றோர் தொடர்ச்சியாக கண்காணித்து, அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு தேவையான அறிவுரைகளை அவ்வப்போது வழங்கவேண்டும். செல்பி மோகத்தில் இருந்து விடுபடவேண்டும் என்றால், தங்களுடைய எண்ணத்தையும், சிந்தனையையும் வேறு பல நல்ல வழிகளில் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தவேண்டும். ஆபத்தைத் தேடிச் செல்லக் கூடாது.

இளைய சமுதாயத்தினர் தவிர்க்க வேண்டும்

கடலூரை சேர்ந்த பல் டாக்டர் காரல்:-

இன்றைய இ்ளைய சமுதாயத்தினர் செல்பி எடுப்பது டிக்டாக், யூடியூப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் லைக், ஷேர், கமென்ட் கிடைப்பதற்காக தான் அதிகமாக தங்களது படங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர் நடுரோட்டில் நின்று ஆடுவது, பாடுவது போன்ற ஏதாவது ஒன்றை செய்து, அதை பதிவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஒரு புறம் வருமானம் கிடைக்கிறது. சிலர் இதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். சிலர் அதை உதாசீனப்படுத்துவார்கள். எதுவாக இருந்தாலும், அந்த படம் அல்லது வீடியோவை டிரெண்டிங்கில் விட்டு விடுகிறார்கள். இந்த படங்கள், வீடியோக்களை சிலர் தவறான வழிகளிலும் பயன்படுத்தக்கூடும். ஆகவே இளைஞர்கள் செல்பி எடுப்பதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

சமூக வலைத்தளங்களில் லைக், கமென்ட் கொடுப்பவர்கள், நமக்கு பிரச்சினை வந்தால் உதவுவது இல்லை. அடுத்த வீடியோவுக்கு மாறி விடுவார்கள். ஆகவே இது போன்ற செல்பி, வீடியோ பதிவுகளை இளைய சமுதாயத்தினர் தவிர்க்க வேண்டும்.

சி.முட்லூர் கல்லூரி மாணவர் அஸ்வின்ராஜ்:-

தற்போது அனைவரது கைகளிலும் செல்போன்கள் தவழ்கிறது. அதிலும் செல்பி மோகம் இல்லாதவர்களே இல்லை. பள்ளி மாணவர்களும் ஏதாவது ஒரு செல்பி, வீடியோ எடு்த்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற வீடியோக்களும் அதிகமாக பரவியது. செல்போன் பயன்படுத்துவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் உஷாராக...

திருவந்திபுரம் கல்லூரி மாணவி கிளாடிஸ் அமலா:-

செல்பி எடுப்பது ஒரு நினைவாக வைத்துக்கொள்வதற்கு தான். ஆனால் அதை சமூக வலைத்தளங்களில் பரப்பி தவறான போக்கில் சென்று விடக்கூடாது. இன்றைக்கு இதை செய்தால் நமக்கு லைக், கமென்ட் வரும் என்று ஏதேதோ படம், வீடியோவை பதிவு செய்கிறார்கள். அதை எத்தனை பேர் பார்த்து லைக் செய்து இருக்கிறர்கள் என்று அதிலே இளைய சமுதாயத்தினர் கவனத்தை செலுத்துகிறார்கள். இதனால் படிக்க வேண்டிய வயதில் படிப்பை விடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். ஒரு வீடியோ, படத்தை பதிவிடும் போது, அது மற்றவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

குறிப்பாக பெண்கள் செல்பி எடுக்கும் போது மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும். அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆபத்தை உணர்வதில்லை

கடலூரில் புகைப்பட 'ஸ்டூடியோ' நடத்தி வரும் சக்திபாபு:-

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக புகைப்பட தொழிலில் இருந்து வருகிறேன். முன்பு கேமராவில் படம் எடுத்து, அதை படமாக வாடிக்கையாளர்களிடம் கொடுக்க 2 நாட்கள் வரை ஆகும். அதிலும் கண்ணை மூடி இருந்தால் படம் கொடுக்க முடியாது. நெகட்டிவ் வீணாகும். இப்போது கண்ணை மூடி இருந்தாலும் அதை திறக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. தற்போது காமிராக்கள் பொருத்தப்பட்ட செல்போன்கள் விற்பனைக்கு வந்த பிறகு புகைப்பட தொழில் நலிவடைந்து விட்டது. இருப்பினும் தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப நாங்களும் எங்கள் தொழிலை மாற்றி வருகிறோம். கேமரா செல்போன் வைத்திருக்கும் அனைவரும் புகைப்படக்காரர்கள் போல் மாறி வருகின்றனர். ஆனால் அதில் இருக்கும் ஆபத்தை உணர்வதில்லை. குறிப்பாக மழை வெள்ளங்கள், ஓடும் ரெயிலில், பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்பி போன்ற எண்ணங்களை இளைய சமுதாயத்தினர் கை விட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்