சாணார்பட்டி அருகே கள்ளக்காதலியுடன் தீக்குளித்த வாலிபர் சாவு
சாணார்பட்டி அருகே கள்ளக்காதலியுடன் தீக்குளித்த வாலிபர் இறந்துபோனார்.
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தவசிமடையில் உள்ள உறவினரான வாசிமலை மனைவி புவனேஷ்வரிக்கும் (30) இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக உருவானது. இதையடுத்து சந்துருவும், புவனேஷ்வரியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக புவனேஷ்வரி, சந்துருவுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் சந்துரு கடந்த 14-ந்தேதி தவசிமடைக்கு வந்தார். அப்போது பேசாமல் இருப்பது குறித்து கேட்டு தகராறு செய்தார். மேலும் பெட்ரோல் கேனுடன் வந்த சந்துரு, பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். பின்னர் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில், அங்கிருந்த புவனேஷ்வரியையும் கட்டிப்பிடித்தார். இதில் அவர் மீதும் தீப்பற்றியது.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சந்துரு மட்டும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சந்துரு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அதேபோல் தற்போது புவனேஷ்வரியும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.