குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்
கோவை
சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக வாலிபர் மீது பரபரப்பான புகாரை அளித்துள்ளனர்.
இளம்பெண் புகார்
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் நேற்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று ஒரு புகார் மனு கொடுத்தார்.அதில் கூறி இருப்பதாவது:-
நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். அப்போது முகநூலில் புதிய சினிமா படத்துக்கு கதாநாயகி தேர்வு நடப்பதாக கூறி தகவல் வெளியிட்டு இருந்தனர். நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு அந்த அறிவிப்பு வெளியிட்டவரை தொடர்பு கொண்டேன். அப்போது அந்த நபர், பொள்ளாச்சிக்கு வருமாறும் அங்குதான் கதாநாயகி தேர்வு நடப்பதாகவும் தெரிவித்தார். அதனை நம்பி பொள்ளாச்சிக்கு சென்றேன். அங்கு கரூர் நல்லியம்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இருந்தார். அவருடன் மேலும் சிலர் இருந்தனர். பின்னர் மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். நானும் அந்த வாலிபரும் மட்டும் இருந்தோம். அப்போது வாலிபர் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்துகொடுத்துள்ளார். அதனை வாங்கி குடித்ததும் மயங்கிவிட்டேன். அதனை பயன்படுத்திக்கொண்ட அந்த வாலிபர் என்னை கற்பழித்தார். மறுநாள் காலை நான் எழுந்தபோது நான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்தேன். இதனால் கண்ணீர் விட்டு அழுதேன். திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பின்னர் கோவையில் வீடு எடுத்து தங்கி இருந்தோம். அப்போதுதன் எனக்கு அந்த வாலிபர் பல பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இந்தநிலையில் என்னைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த இளம்பெண் புகாரில் கூறி இருந்தார். இது போல் அவர் மீது மற்றொரு பெண்ணும் புகார் அளித்துள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-
தனியார் பள்ளி ஆசிரியை
கோவை வேடப்பட்டியை சேர்ந்த 31 வயது பெண்ணும் புகார் கொடுக்க வந்து இருந்தார். அவர் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன். அப்போது எனது திருமணத்துக்காக ஆன்லைனில் தகவல் வெளியிட்டு இருந்தேன். அதனை பார்த்து கரூர் வாலிபர் என்னை தொடர்பு கொண்டார். மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றுவதாக என்னை ஏமாற்றி 2020-ம் ஆண்டு என்னை திருமணம் செய்துகொண்டார். 42 பவுன் நகை மற்றும் பணம் வரதட்சணையாக கொடுத்து எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
வேடப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தோம். அப்போது மத்திய அரசு வேலை போய்விட்டதாகவும் தற்போது கடனை அடைக்க பணம் வேண்டும் என்றும் கேட்டார். ஒருநாள் தூக்கில் தொங்குவது போல் நடித்தார். உடனே நாங்கள் சமாதானப்படுத்தி ரூ.15 லட்சம் புரட்டி கொடுத்தோம். அதன்பின்னர் வங்கி பணிக்கு செல்வதாக கூறி எனது நகைகளை வாங்கி விற்றார். இதுபற்றி கேட்டபோது என்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார். நாங்கள் 2 பேரும் தனிமையில் இருக்கும் படங்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி விடுவதாக கூறி மிரட்டினார். இந்த பிரச்சினை போலீஸ் நிலையம்வரை சென்றது என்னை விட்டு சென்றவர் அதன்பின்னர் திரும்பி வரவில்லை.
பல பெண்கள் பாதிப்பு
இந்தநிலையில் என்னைப்போல் 10-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் ஏமாற்றிய விவரம் எனக்கு தெரிந்தது. எங்களை போன்ற அப்பாவி பெண்களை ஏமாற்றி நகை பறிக்கும் அந்த வாலிபர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு வாலிபர் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.