கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் கொலை: எலி பிஸ்கட் சாப்பிட்ட கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் கொன்ற கணவர் எலி பிஸ்கட் சாப்பிட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் முருகன் (வயது 25). இவருடைய மனைவி விஜயா(20). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக விஜயா தனது கணவரை பிரிந்து கள்ளக்குறிச்சி அருகே மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு முருகன், மோ.வன்னஞ்சூருக்கு சென்று மனைவி விஜயாவிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த முருகன், தான் மறைத்து வைத்து எடுத்து சென்ற கத்தியால் விஜயாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது முருகன் தான் வைத்திருந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலனை குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் அதையும் பொருட்படுத்தாமல் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், முருகனை கைது செய்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவில் போலீஸ் நிலையத்தில் இருந்த முருகன், தான் மனைவியை கொலை செய்வதற்கு முன்னர் தான் எலி பிஸ்கட்(விஷம்) சாப்பிட்டதாகவும், இதனால் தனக்கு மயக்கம் வருவதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முருகன் எலி பிஸ்கட் சாப்பிட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.