தீவட்டிப்பட்டி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு

தீவட்டிப்பட்டி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-11-23 20:34 GMT

ஓமலூர்,

வரதட்சணை

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி நைனாகாடு பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி என்ற பெருமாள். இவருடைய மகள் அனு ஸ்ரீ (வயது 26). இவருக்கும், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பொன் கவுதம் நந்தா என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது 100 பவுன் நகையும், ரூ.22 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், அனு ஸ்ரீயிடம் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் பொன் கவுதம் நந்தா, மாமனார் தங்கராஜ், மாமியார் அருள்மணி ஆகியோர் துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனு ஸ்ரீ, குழந்தை பேறு சம்பந்தமாக பரிசோதனை செய்துள்ளார். பின்னர் தீவட்டிப்பட்டி பங்களா தோட்டத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து தங்கி உள்ளார்.

இளம்பெண் தற்கொலை

இந்த நிலையில் இளம்பெண் அனு ஸ்ரீயிடம் விவாகரத்து கேட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது கணவர் நோட்டீஸ் விட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அனு ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றார்.

அங்கு நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு அவர் வராததால் மேல் மாடிக்கு சென்று பெற்றோர் பார்த்தனர். அங்கு விஷத்தில் சர்க்கரையை கலந்து குடித்து அனு ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மனம் உடைந்து எங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தற்கொலை செய்து கொண்ட அனு ஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு

இதையடுத்து அனு ஸ்ரீயிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் பொன் கவுதம் நந்தா, மாமனார் தங்கராஜ், மாமியார் அருள்மணி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இளம்பெண் தற்கொலை தொடர்பாக மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்