மத்திய அரசின் நிதி உதவி பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவி பெற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதிஉதவி பெற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
பிரதம மந்திரி கிஷான் திட்டம்
பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதலில் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் என்று தொடங்கி, தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவித்தொகையாக விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி மாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் இதுவரை 13 தவணைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 14-வது தவணைத்தொகை வரும் மாதத்தில் விடுவிக்கப்படவுள்ளது. எனவே, அடுத்த தவணை பிரதம மந்திரி கிஷான் உதவித் தொகை பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வலைதளத்தில் பதிவேற்றம்
எனவே, இந்த திட்டத்தின்படி பதிவு செய்து பயன்பெற தகுதியான பயனாளிகள் அனைவரும் பெயர் மற்றும் ஆதார் விபரங்களை மத்திய அரசின் பிரதம மந்திரி கிஷான் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இத்திட்ட பயனாளிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று ஆதார் விபரங்கள் மற்றும் கைரேகை வைத்து பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும்.
எனவே இத்திட்ட பயனாளிகள் அனைவரும் இந்த இரண்டு வழிமுறையில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே அடுத்த தவணை உதவித்தொகை கிடைக்கும். மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.