மத்திய, மாநில அரசின் மானிய உதவியுடன் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

அனைவருக்கும் வீடு திட்டத்தில் மத்திய, மாநில அரசின் மானிய உதவியுடன் வீடுகள் தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-11 16:51 GMT

அனைவருக்கும் வீடு திட்டத்தில் மத்திய, மாநில அரசின் மானிய உதவியுடன் வீடுகள் தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

குடியிருப்புகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கயைில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ், சிவகங்கை தாலுகா, பையூர்பிள்ளைவயல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 608 அடுக்கு மாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு சிவகங்கை நகராட்சி எல்கைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், நகர்புறத்தில் வசிக்கும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கு முன்னுரிமை அளித்து குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு முகாம்

இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவு தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள பயனாளிகளின் பங்குத்தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். மேலும் "அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி, மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேற்கண்ட திட்டப்பகுதிகளில் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர்; 1) இந்தியாவில் தனது பெயரிலோ, தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை என்றும் தனது மாத வருமானம் ரூ.25,000-க்கு மிகாமலும் உள்ளது எனவும் சான்றளிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் வீடு பெற விரும்புபவர்கள் பயனடைய விரும்பும் குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வருகிற 15 மற்றும் 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிவகங்கை, பையூர்பிள்ளைவயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் ரூ.5 ஆயிரம் மட்டும் மதிப்பிற்கான கேட்பு காசோலையினை Executive Engineer, PIU, Madurai என்ற பெயரில் எடுத்து பயனாளியின் ஆதார் நகல், வண்ணப்புகைப்படம்- 2, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்தொகையானது பயனாளியின் பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதத்தொகையினை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும்போது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்