மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-29 17:52 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி, ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு தகுதியான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30.9.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வழிகாட்டு நெறிமுறைகள்

இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ- மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT குறியீட்டு எண்ணை மாணவ- மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்